நூறு டாலர் கணிணியின் சில படங்கள். பார்க்க நன்றாக இருக்கிறது. சீன மொழி என்று நினைக்கிறேன். என்ன எழுதியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதை நூறு டாலருக்கு தயாரிக்க முடிவது ஆச்சரியம் தான். MIT பக்கத்தில் இது விலைக்கு இல்லை என்று போட்டிருக்கிறார்கள்.

ஆனால் கொஞ்சம் அதிக விலைக்கு லாபத்தோடு இதை மற்றவர்களுக்கு விற்றாலும் எல்லோரும் விரும்பி வாங்குவர் என்று தோன்றுகிறது.

இதில் உள்ளவை,
லினக்ஸ்
கலர் LCD
500 MHz புராசசர்
128MB DRAM
500 MB Flash memory
வயர்லஸ் கார்ட்
ஒரு கணிணி இன்னொன்றுடன் எளிதாக இந்த வயர்லெஸ் கார்ட் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.
கடின வட்டு கிடையாது.

கடின வட்டு இல்லாததால் 500 MB Flash Memory குறைவாக படுகிறது. அது அனேகமாக மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும். என்னுடைய காமிராவிற்கு மட்டும் நான் 512 MB வைத்திருக்கிறேன்.

நல்ல முயற்சி. இன்னும் என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை.





காலையில் எழுந்து வேலைக்கு கிளம்பி வெளியில் வந்து பார்த்தால் எங்கும் வெள்ளை. என்னுடைய காருக்கு பக்கத்தில் எதிர்த்த வீட்டு பாட்டி சுறுசுறுப்பாக தன்னுடைய காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். காரை கிளப்பி விட்டு நானும் சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். நடுவே பாட்டி சுகம் விசாரித்து விட்டு இது தான் முதல் பனியா என்று கேட்டார். நான் இல்லை ஏற்கனவே நிறைய அனுபவித்தாயிற்று என்றதும் Isn’t it nice என்றார். இந்த வயதில் கஷ்டப்பட்டு பனியை சுத்தம் செய்து விட்டு இன்னும் அதை ரசிப்பது ஆச்சரியமாக இருந்தது.

அப்புறம் அலுவலகம் சென்று விட்டு வேறு அலவல் காரணமாக வெளியில் செல்ல வந்தது. போன இடத்தில் வேலை முடிந்ததும் கிளம்பும் போது கிட்டத்தட்ட அரை அடிக்குமேல் பனி பெய்துவிட்டது. அந்த இடத்தில் பனியை இன்னும் சுத்தம் செய்திருக்கவில்லை. அங்கிருத்து காரில் வெளியில் வருவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. நான் தூரம் குறைந்த வழியில் செல்லலாம் என்று பின்னால் வந்தால் கார் ஒரு சுற்று சுற்றி எதிர்ப்பக்கம் பார்த்து நின்றது.

சரி கார் போன வழி என்று அந்தப் பக்கமே போகலாம் என்றால் அங்கே கொஞ்ச தூரம் போனதும் பார்த்தால் பனியில் சிக்கி ஏற்கனவே ஒரு பெரிய வேன் உற்பட நான்கு கார்கள் நின்றிருந்தன. நானும் கொஞ்ச நேரம் முன்னால் ஏற்கனவே இருந்த டயர் தடத்தில் போய் பின்னால் நின்றேன். பக்கத்தில் இருந்த வேன் ஓட்டுனர் பெரிய பனி அள்ளும் தட்டை வைத்து வேனைச் சுற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

நான் இங்கே வழியை விட்டு விலகி பார்க் மட்டும் தான் செய்யப் போகிறேன். அதற்கப்புறம் உனக்கு உதவி செய்கிறேன் என்றார். கொஞ்சம் சுத்தம் செய்து விட்டு லேசாக வேனை திருப்பி நிறுத்த முயன்றார். வேன் நின்ற இடத்திலேயே சுற்றியது. இது அவ்வளவு தான் என்று கூறி விட்டு, வந்து என்னுடைய காரின் முன்னால் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். சிறிது செய்து விட்டு கொஞ்சம் கிளம்பினாலும் அதே வேகத்தில் போய் விடலாம் என்று நினைத்து கிளம்பினால் மீண்டும் பத்தடி தூரத்தில் போய் சிக்கிக் கொண்டது.

இதே நேரத்தில் பக்கத்தில் வசிப்பவர்கள் இரண்டு பேர் வந்து முன்னால் நின்ற மூன்று கார்களை தள்ளிக் கொண்டிருந்தார்கள். ஒரு சில அடிகள் அவை முன்னால் போயிருக்கும் அந்த வழியாக ஒரு பனி சுத்தம் செய்யும் புல்டோசர் மாதிரி இயந்திரம் வந்து ஒரு தடவை வழித்து விட்டு ஒரு பாதை உண்டாக்கி விட்டுப் போனது.

இப்போது முன்னால் இருந்த காரை அவர்கள் ஒவ்வொன்றாக அந்த பாதையில் தள்ளி விட்டு அனுப்பி விட்டார்கள். அப்புறம் வந்து என்னுடைய காரையும் அந்த பாதையில் தள்ளி விட்டார்கள். யார் அந்த புண்ணியவான்களோ தெரியாது.

அப்புறம் நான் நிறுத்தாமல் முன்னால் சென்றால் மெயின் ரோட்டில் சேரும் இடத்தில் மூன்றாவதாக முன்னால் சென்ற கார் பனியில் சிக்கி நின்றிருந்தது. நான் முன் ஜாக்கிரதையாக வேகம் எடுப்பதற்காக கொஞ்சம் தூரத்திலேயே நிறுத்தி விட்டு இறங்கி அந்த காரிடம் சென்றேன்.

காரில் இருந்த பெண்ணிடம் நான் காரை பின்னால் தள்ளுகிறேன் நீங்கள் முதலில் Reverse எடுங்கள் என்று பின்னால் தள்ளி விட்டு அப்புறம் கொஞ்சம் இடம் கிடைத்ததும் மீண்டும் முன்னால் வேகமாக போகச்சொன்னேன். இதற்குள் என் காருக்கு பின்னால் ஒரு லைன் ஆரம்பித்திருந்தது. அதிலிருந்த இறங்கி வந்து இன்னொருவரும் என்னுடன் தள்ளினார். கடைசியில் ஓரளவு சுத்தமாக இருந்த ரோட்டில் சேர்ந்து அந்த பெண் போய் விட்டார்.

பின்னால் இருந்த காரில் இருந்து இறங்கி வந்தவர் These women drivers என்று சொல்லி விட்டுப் போனார்.

காலையில் பாட்டி சொன்ன Isn’t it nice தான் ஞாபகத்திற்கு வந்தது.





தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். frappr என்று ஒரு வரைபட தளம் உள்ளது. அங்கே சென்று நீங்கள் tamilbloggers என்னும் குழுவில் சேர்ந்து உலக வரைபடத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும்.

எனக்கு எல்லோரும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எல்லாம் இல்லை. அங்கங்கே வலைப்பதிவர் சந்திப்பு நடத்த இது உதவியாக இருக்கும்.

ஊர் பெயர் இருந்தால் மட்டும் போதும்.

உங்களுடைய வலைப்பதிவிலும் இந்த குழுவின் முகவரியை இட்டால் இந்த பதிவைப் படிக்காதவர்களுக்கும் இது பற்றி தெரியவரும்.

குழுவின் முகவரி
http://www.frappr.com/tamilbloggers.

இது அமெரிக்காவிற்கு மட்டும் அல்ல. முழு உலக வரைபடமும் அங்கே இருக்கிறது. அந்த பக்கத்தை திறந்ததும் வலது பக்கம் Add Yourself என்று பெரியதாக இருக்கும் இணைப்பிற்கு போய் உங்களை இணைத்துக் கொள்ளலாம். நான் முயற்சித்த போது தமிழ் யூனிகோடு பெயர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஆங்கிலத்திலேயே பதியலாம்.

நீங்கள் வலை உலகில் அனாமதேயராக இருக்க விரும்பினால் உங்கள் விருப்பம். (ஆனால் நீங்கள் யாருடைய வலைப்பதிவிலாவது proxy வழியாக செல்லாமல் பின்னூட்டம் இட்டிருந்தால் அங்கிருக்கும் உங்கள் IP முகவரி கொண்டு எந்த ஊர் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம். :) )

நன்றி.





ஆங்கிலத்தில் erotomania என்ற வார்த்தையை ஒரு திரைப்படத்தில் தான் முதலில் பார்த்தேன். இதற்கு ஒரு வார்த்தையில் தமிழ் இருக்கிறதா தெரியவில்லை. இது ஒரு மனநோய்.

உதாரணத்திற்கு ஒருவர் ஒருதலைக் காதல் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். இது அந்த காதலிக்கப்படும் பெண்ணுக்கோ ஆணுக்கோ தெரிந்தோ தெரியாமலோ இருக்கலாம். காதலிக்கப்படுபவர் பின்னாலேயே சுற்றி அவர் செய்யும் சின்ன சின்ன காரியங்களுக்கெல்லாம் தாங்களாகவே ஏதாவது அர்த்தம் கற்பித்துக்கொண்டு உருகுவர். உதாரணத்திற்கு தற்செயலாக தங்கள் பக்கம் திரும்பினாலும் தன்னைத்தான் பார்ப்பதாக நினைத்துக் கொள்வர். அவர்கள் நிற்பது, நடப்பது, உடைகள் அணிவது, வைத்திருக்கும் பொருட்கள் இதன் மூலம் தங்களுடைய காதலை ரகசியகமாக தெரிவிப்பதாக நினைத்துக் கொள்வர். இதற்குப் பெயர் தான் எரோட்டோமேனியா.

He Loves Me… He Loves Me Not திரைப்படம் இந்த நோயை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தின் முடிவில் எரோட்டோமேனியா என்று சப்டைட்டில் போடப்பட்டிருப்பதைப் பார்த்ததும் உடனடியாக கூகிளில் இட்டுப் பார்த்தேன். விக்கிபீடியாவில் கொடுத்திருந்த அருமையான விளக்கம் முதலாவதாக வந்தது. இந்த படத்தையும் அதற்கு உதாரணத்திற்கு கொடுத்திருந்தனர்.

Audrey Tautou, படத்தின் ஹீரோயின் நன்றாக நடித்திருந்தார்.





வலைப்பதிவுகளில் எந்த நேரமும் மூழ்கிக் கிடப்பவரா? உடனுக்குடன் புதிய பதிவுகளை படிக்க ப்ரொவுசரை விட அழகான ஒரு மென்பொருள். மிக நன்றாக செய்திருக்கிறார்கள். பேர் தான் எங்கிருந்து வைத்தார்கள் என்று தெரியவில்லை, கொன்ஃபூபுலேட்டர் என்று. கணிணியில் வேறு பல உபயோகமான விசயங்களையும் எளிதாக படம் காட்டலாம். கீழே என்னுடைய கணிணியில் இதன் படம்.

படத்தில் மேலே செய்யவேண்டியவை. அடுத்து வானிலை. கீழே வலைப்பதிவுகள். இதில் இன்னும் நிறைய உண்டு. புதிதாக எதுவும் செய்வதும் எளிது.

சாமுரைஸ் என்று இதே போல் ஒன்று உபயோகித்து வந்தேன். ஆனால் இது அதை விட நன்றாக இருக்கிறது.

மேசை





உத்திர பிரதேசத்தில் உயர் ஜாதியினர் உபயோகிக்கும் குளத்தில் மீன் பிடித்ததிற்காக ராம் பிரசாத் என்பவர் முகத்தில் ஆக்சிட் வீசினர். இதைப்பற்றி National Geographic ஜுன் 2003 இதழில் வெளியான செய்தியைப் பார்த்து பெக்கி பென்ராட் என்னும் அமெரிக்காவில் ஒகாயோ மாநிலத்தில் வாழ்பவர் அவருக்கு உதவ எண்ணி National Geographic இதழ் ஆசிரியரை அணுகி ராம்பிரசாத்தின் முகவரியை கண்டுபிடித்து அவருடைய அலுவலகம் மூலமாக $17000 நிதி நிதி திரட்டி அனுப்பியுள்ளார். இதைப் பார்த்தாவது அந்த ஊரில் உள்ளவர்கள் திருந்தினால் நல்லது. இன்னும் ஏன் மனிதர்கள் மனிதர்களாக இல்லை என்று தெரியவில்லை.

புகைப்படம் மற்றும் செய்தி.





ரொம்ப நாள் கழித்து இப்பொழுது தான் இந்த பதிவுகளைப் பார்த்தேன்.

வலைப்பதிவர் சந்திப்பு.

காசி எழுதியது.

மெய்யப்பன் எழுதியது.

கீழே நான் எடுத்த படம்.

இந்த படத்திற்காகத்தான் காமிராவை அவ்வளவு நேரம் நோண்டியது.

வலைப்பதிவர்





கணிணி மூலம் எக்குத்தப்பாக வார்த்தைகளைக் கோர்த்து தானாகவே ஒரு ஆராய்ச்சி பேப்பர் தயார் செய்யும் ஒரு மென்பொருள் செய்திருக்கிறார்கள் MIT மாணவர்கள். கல்லூரி மாணவர்களுக்கு இது வரப்பிரசாதம். இது தயார் செய்த ஒரு பேப்பரை ஒரு கான்பெரன்சுக்கு அனுப்பி அதை அங்கே அனுமதித்து பேசவும் அழைத்திருக்கிறார்கள். அதற்கப்புறம் வந்த பத்திரிக்கை செய்திகளைப் பார்த்து கொஞ்சம் லேட்டாக உரைத்து இப்போது அந்த அழைப்பை ரத்து செய்து விட்டார்கள்.

இது ஒன்றும் புதிது கிடையாது. கொஞ்சம் அர்த்தமுள்ள வார்த்தை செய்வதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. கொஞ்ச நாள் முன்னால் வலைப்பதிவு எழுதுவதற்கு சோம்பேறித்தனமாக இருந்த போது இது மாதிரி ஒரு மென்பொருள் எழுதி பல பதிவுகளில் இருந்து வரிகளை சுட்டு கொஞ்சம் வார்ததைகளை சேர்த்து வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன். அதற்கும் சோம்பேறித்தனம்.

இதில் மேலும் ஆர்வம் இருந்தால் ALICE என்னும் மென்பொருள் உரையாடியைப் போய் பாருங்கள்.





இருந்தாலும் இந்த குரங்கிற்கு கொஞ்சம் கொழுப்பு ஜாஸ்தி.





ஒவ்வொரு வருடமும் பாஸ்டன் மராத்தான் பந்தயம் Patriots’ Day அன்று நடத்தப் படுகிறது. Patriots’ Day ஏப்ரல் மாதம் மூன்றாம் திங்கள் கிழமை புரட்சிப் போர் ஆரம்பித்தன் நினைவாக கொண்டாடுகிறார்கள். முதல் மராத்தான் 1896ல் நடந்தது. உலகிலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்ட பந்தயம் இது. மொத்தம் 26 மைல் தூரம் ஹாப்கின்டன் என்னும் இடத்தில் ஆரம்பித்து பாஸ்டனில் முடிகிறது. எங்கள் ஊர் வழியாகவும் போவதால் போய் கூட்டத்தோடு ஓடுபவர்களை கொஞ்சம் வேடிக்கை பார்த்து கைதட்டிவிட்டு வந்தேன். மன உறுதியையும் உடல் உறுதியையும் சோதிக்கும் பந்தயம் இது.

இதில் சக்கர நாற்காலி, ஆண்கள், பெண்கள் என்று பிரிவுகள் உண்டு.

ஊனமுற்றவர்கள் சக்கர நாற்காலியில் பங்கு கொள்வார்கள்.

பந்தயத்தில் சக்கர நாற்காலியில் ஒருவர்.
IMG_0062

மகனை சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு ஒரு தந்தை.
IMG_0068

மனதைத் தொடும் காட்சி. இவர் தன்னுடைய கால்களால் தரையில் உந்தித்தள்ளிக்கொண்டு சென்றார்.
IMG_0069

பெண்களில் முதலில் செல்லும் இருவர்.
IMG_0065

ஆண்களில் முதலில் செல்லும் இருவர்.
IMG_0070

கூட்டமாக பலர்.
IMG_0071





« Previous Articles